நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் 150ஆவது ஆண்டை முன்னிட்டு அவர் தமிழுக்கும் மறைக்கும் ஆற்றிய பணியை வெளிக்கொணரும் நோக்கில் சிறப்பு நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ். தமிழ்ச்சங்கம், யாழ். மறைமாவட்டம், யாழ் மாகாண அமலமரித்தியாகிகள் ஆகியோரின் இணைந்த ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளின் முதல் நிகழ்வான முப்பொன் விழா ஆண்டு அங்குரார்ப்பண நிகழ்வு கலாச்சார பேரணியுடன் வருகின்ற 13ஆம் திகதி வியாழக்கிழமை அச்சுவேலியில் நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் காலை 08:30 மணிக்கு அச்சுவேலி பேருந்து நிலையத்திலிருந்து கலை பண்பாட்டு பேரணி ஆரம்பமாகி புனித திரேசா கல்லூரியை சென்றடைந்து கல்லூரி மண்டபத்தில் அரங்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இப்பேரணியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலை, இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடம், மானிப்பாய் புனித அன்னாள் பாடசாலை, அச்சுவேலி மகா வித்தியாலயம், அச்சுவேலி புனித திரேசாள் பாடசாலைகளை சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுடன் மக்களும் பங்கேற்கவுள்ளனர்.