பருத்தித்துறை மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள தும்பளை புனித லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா 11ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்திரு யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் திருநாள் திருப்பலியை தலமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருப்பலி மறையுரையில் ஆயர் அவர்கள் அன்னை மரியாள் அர்ப்பண வாழ்வின் சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்து இறை அழைப்பிற்கு ஆம் என்று சொல்லி இறுதிவரை பிரமாணிக்கமாய் இருந்து குடும்ப வாழ்வு மற்றும் அழைத்தல் வாழ்வுக்கான அர்ப்பணத்தின் அடையாளமாக இருந்தார் என்பதனை சுட்டிக்காட்டி அவரின் அர்ப்பண வாழ்வின் முன்மாதிரிகையை நாம் பின்பற்ற வேண்டுமென்றும் தெரிவித்தார். அத்துடன் என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை என்று கூறிய இயேசு கானாவூர் திருமணவீட்டில் தாய் சொல்லை தட்டமுடியாமல் தனது முதல் புதுமையை அன்னையின் பரிந்துரையால் நிகழ்த்தியது அன்னையின் பரிந்துரை மிகவும் வல்லமையானது என்பதனை எமக்கு உணர்த்துவதை குறிப்பிட்டு நாம் அன்னைமரியாளின் பரிந்துரைக்காக தொடர்ந்தும் மன்றாட வேண்டுமெனவும் அழைப்புவிடுத்தார். திருநாள் திருப்பலியை தொடர்ந்து தும்பளை லூர்து அன்னையின் கெபியில் அன்னையின் சுருப ஆசீர்வாதமும் ஆயர் அவர்களினால் வழங்கப்பட்டது.