ஈழ நாடக வரலாற்றில் மிக முக்கியமானவரும் நாடக அரங்க கல்லூரியின் நிறுவனருமான திரு. குழந்தை சண்முகலிங்கம் அவர்கள் கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.
ஈழத்து சிறுவர் நாடக தந்தை என்றும் ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தாய் என்றும் அழைக்கப்படும் இவர் நூற்று ஜம்பதற்கு மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளதுடன் வெளிநாட்டு நாடக ஆசிரியர்களின் நாடகங்கள் சிலவற்றையும் யப்பானிய நாடகங்கள் சிலவற்றையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
1978ஆம் ஆண்டு தை மாதம் 23ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரியை நிறுவி நாடகத்தை ஒரு பயிற்சி நெறியாக தமிழ் கலைஞர்கள் மத்தியில் அறிமுகம் செய்த இவர் 1980களுக்குப் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொண்ட அரசியல் பிரச்சனைகள், பெண்கள் மாணவர்களுக்கெதிரான இராணுவ அடக்குமுறை, கல்வி, சாதிய அடக்குமுறைகள் சமூகத்தின் போலித்தனங்கள் போன்றவற்றை தனது நாடகங்கள் மூலமாக வெளிப்படுத்தி வந்துள்ளார்.
கா.பொ.த உயர்தரத்தில் நாடகத்தை ஒரு பாடமாகக் கொண்டுவருவதிலும் யாழ்ப்பாண தேசிய கல்வியியல் கல்லூரியில் நாடகமும் அரங்கியலும் பாடத்தை ஆரம்பிப்பதிலும் முக்கிய பங்காற்றிய இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் பாடம் ஒரு துறையாக வளர்ச்சியடைவதற்கு
மூலகாரணமானவர்.
இவர் எழுதிய மண்சுமந்த மேனியார் நாடகம் ஈழத்தமிழரின் போராட்டம் பற்றியும், அன்னை இட்ட தீ நாடகம் போரினால் மக்கள் மனங்களில் ஏற்பட்ட வடுக்கள் பற்றியும், யார்க்கெடுத்துரைப்பேன் நாடகம் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த அகதிகளின் அவலநிலையை பற்றியும் வேள்வித் தீ நாடகம் இந்திய அமைதிப் படையினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் நிலையை பற்றியும் சித்தரிக்கின்றன.