யாழ். திருமறைக்கலாமன்றத்தால் இவ்வருடம் மேடையேற்றப்படவுள்ள திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகைக்கான பிரதி வழங்கும் நிகழ்வு கடந்த 05ஆம் திகதி புதன்கிழமை யாழ். மாட்டீன் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைஞானசுரபி தியான இல்லத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து ஆசியுரை வழங்கி ஆற்றுகையில் பங்கேற்கவுள்ள கலைஞர்களுக்கான பிரதிகளை வழங்கிவைத்தார்.
இவ்வாண்டு திருப்பாடுகளின் ஆற்றுகை ‘வெள்ளியில் ஞாயிறு’ என்னும் பெயரில் எதிர்வரும் சித்திரை மாதம் 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை மாலை 6.45 மணிக்கு யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற அரங்கில் மேடையேற்றப்படவுள்ளது.
“வெள்ளியில் ஞாயிறு” திருப்பாடுகளின் காட்சி முதன் முதலாக 2010ஆம் ஆண்டிலும், அதனைத் தொடர்ந்து 2018 ஆண்டிலும் மேடையேற்றப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுக்கொண்டதுடன் தற்போது ஏழு ஆண்டுகளின் பின்னர் மீண்டும் மன்றத்தின் பிரதி இயக்குநர் திரு. யோன்சன் ராஜ்குமார் அவர்களின் நெறியாள்கையில் மேடையேற்றப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.