யாழ். திருமறைகலாமன்றத்தால் இவ்வருடம் முன்னெடுக்கப்படவுள்ள திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகைக்கான பிரதி வழங்கும் நிகழ்வு கடந்த 14ஆம் திகதி புதன்கிழமை யாழ். மாட்டீன் வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற கலைஞானசுரபி தியான இல்லத்தில் நடைபெற்றது.
மன்ற பிரதி இயக்குனர் திரு. ஜோன்சன் ராஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித மடுத்தினார் சிறிய குருமட ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை றெஜி இராஜேஸ்வரன் அவர்கள் கலந்து ஆசியுரை வழங்கி ஆற்றுகையில் பங்கேற்கவுள்ள கலைஞர்களுக்கான பிரதிகளை வழங்கிவைத்தார்.
இவ்வாண்டு திருப்பாடுகளின் ஆற்றுகை ‘வேள்வித்திருமகன்’ என்னும் பெயரில் திரு. தைரியநாதன் யஸ்ரின் ஜெலூட் அவர்களின் நெறியாள்கையில் எதிர்வரும் மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மாலை 6.45 மணிக்கு யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில் மேடையேற்றப்படவுள்ளது.
திருமறைக்கலாமன்ற ஸ்தாபகர் அமரர் அருட்தந்தை மரிய சேவியர் அவர்களால் இறுதியாக எழுதப்பட்ட ‘வேள்வித் திருமகன்” திருப்பாடுகளின் நாடகம் முதன் முதலாக 2012 ஆம் ஆண்டிலும், அதனைத் தொடர்ந்து 2014, 2016ஆம் ஆண்டுகளிலும் மேடையேற்றப்பட்டதுடன் தற்போது எட்டு ஆண்டுகளின் பின் மீண்டும் இவ்வாற்றுகை மேடையேற்றப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.