இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதிச்சடங்கு திருவழிபாட்டு நிகழ்வு திருத்தந்தையர்களுக்குரிய இறுதித் திருச்சடங்குகள் நிறைவேற்றும் சட்டவிதிகளின்படி 26ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

கர்தினால்கள் அவையின் தலைவர் கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்களின் தலைமையில் வத்திக்கான் புனித போதுரு வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் திருப்பலி நிறைவில் இரங்கல் செய்தி மற்றும் பிரியாவிடை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன் தொடர்ந்து திருத்தந்தையின் உடலைத் தாங்கிய அடக்கப்பெட்டி புனித பேதுரு பெருங்கோவிலின் உள்ளே கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் நல்லடக்கத்திற்காக புனித மேரி மேஜர் பெருங்கோவிலுக்குக் எடுத்துச் செல்லப்பட்ட திருத்தந்தையின் உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் முதுபெரும் தந்தையர்கள், கர்தினால்கள், ஆயர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுமக்களென பலரும் கலந்து திருத்தந்தையின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபித்தனர்.

இறப்பின் பின்னர் அவரது இல்லமாகிய சாந்தா மார்த்தா இல்லத்தில் வைக்கப்பட்ட திருத்தந்தையின் உடல் 23ஆம் திகதி புதன்கிழமை சாந்தா மார்த்தா வளாகம் வழியாக சிறப்பு செபவழிபாட்டுடன் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலிற்குள் பவனியாக எடுத்துவரப்பட்டு புனித பேதுரு பெருங்கோவிலின் முன்புற நுழைவாயில் வழியாக ஆலயத்திற்குள் எடுத்துச் செல்லப்பட்டது.

மெழுகுதிரிகள் ஏந்திய பீடப்பணியாளர்கள் மற்றும் அருள்பணியாளர்களுடன் பெருங்கோவிலின் மணிகள் இடைவிடாது ஒலியெழுப்ப, சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து புறப்பட்ட பவனியில் ஆயர்கள் மற்றும் கர்தினால்களைத் தொடர்ந்து திருத்தந்தையின் உடல் தாங்கிய பெட்டியை உதவியாளர்கள் சுமந்து வந்தனர்.

அவர்களைச் சுற்றி சுவிஸ் காவலர்களும் மெழுகுதிரி ஏந்திய வத்திக்கான் பணியாளர்களும் திருத்தந்தையின் உடலைத் தாங்கியிருந்த பெட்டியுடன் நடந்துவந்து மரியாதை செலுத்தினர். திருத்தந்தையின் உடல் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலின் வளாகத்தை வந்தடைந்ததும் வளாகத்தில் கூடியிருந்த 20,000ற்கும் அதிகமான மக்கள் இடைவிடாது கரவொலி எழுப்பி திருத்தந்தையின் உடலை வரவேற்றனர்.

அங்கு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட திருத்தந்தையின் உடலை இறுதியாக பெட்டியில் வைத்து மூடும் வழிபாட்டுச் சடங்கு 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை இத்தாலிய நேரம் இரவு 8 மணிக்கு இடம்பெற்றது.கமர்லெங்கோ எனப்படும் திருத்தந்தையின் திருத்துணைவர் குழுவின் கருவூலத் தலைவர், கர்தினால் கெவின் பெரல் அவர்கள் தலைமைதாங்கி நடத்தினர்.

கர்தினால்கள் ஜுவானி பாத்திஸ்தா ரே, பியெத்ரோ பரோலின், ரோஜர் மஹோனி, தொமினிக் மம்பெர்த்தி, மௌரோ கம்பெத்தி, பல்தசாரே ரெய்னா, கொன்ராடு க்ராயெவிஸ்கி ஆகியோர் முன்னிலையில் திருத்தந்தையின் அடக்கப்பெட்டி மூடப்பட்டு முத்திரையிடப்பட்டது.

1957ஆம் ஆண்டு தனது 20 வயதிலேயே மூச்சுக்குழல் நோயால் பாதிக்கப்பட்டு தனது நுரையீரலின் ஒரு பகுதியை இழந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுவாசக்குழல் அழற்சி நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக மாசி மாதம் 14ஆம் திகதி உரோம் நகரின் அகுஸ்தீனோ ஜெமெல்லி மருத்துவமனையில் 38 நாட்கள் அனுமதிக்கப்பட்டு கடந்த மாதம் 23ஆம் திகதி தனது இல்லம் திரும்பினார்.

தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு தினத்தன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியின் நிறைவில், ‘ஊருக்கும் உலகுக்கும்’ என்ற ‘ஊர்பி எத் ஓர்பி’ சிறப்புச் செய்தியை வழங்குவதற்காக நடுமாடத்திற்கு வந்து திருப்பயணிகளை வாழ்த்தி செய்தியின் நிறைவில் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருப்பயணிகளின் நடுவில் திறந்த காரில் வலம்வந்து திருப்பயணிகளைச் சந்தித்து ஆசீர் வழங்கிய நிலையில் 21ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin