திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் ஏற்கனவே எழுதி வைத்துள்ள அவரின் விருப்பப்படி வத்திக்கானுக்கு வெளியே ஏறக்குறைய 5 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் உரிய மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்படது.

“என் வாழ்நாள் முழுவதும், ஓர் அருள்பணியாளராகவும், ஆயராகவும் எனது ஊழியத்தின் போது, நான் எப்போதும் என்னை நம் ஆண்டவரின் அன்னையாம் புனித கன்னி மரியாவிடம் ஒப்படைத்து அவரில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு வந்துள்ளேன். இந்தக் காரணத்திற்காக, நான் உயிர்த்தெழும் அந்நாளுக்காக எனது உடல் புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என வேண்டுகிறேன்” என்று தன் கடைசி விருப்ப பத்திரத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்திருந்தார்.

திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நாள் காலையில், அதாவது 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி புனித மேரி மேஜர் பேராலயத்திற்கு பயணம் செய்து அன்னை மரியா திரு உருவத்தின் முன் செபித்து தன் பணிகளை ஆரம்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் “எனது மண்ணக வாழ்வின் இறுதிப் பயணம் பழம்பெருமை வாய்ந்த இந்த மரியன்னை பெருங்கோவிலில் முடிவடைய வேண்டுமென நான் விரும்புகின்றேன்” என சுட்டிக்காட்டி “எனது ஒவ்வொரு திருத்தூதுப் பயணத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் இறைவேண்டல் செய்ய நான் இங்கே வருகிறேன்” என்றும், “நம்பிக்கையுடன் எனது உள்ளத்தின் நோக்கங்களை புனிதமிகு அன்னை மரியாவிடம் ஒப்படைத்து அவருடைய இளகிய மற்றும் தாய்வழி கவனிப்புக்கு நன்றி செலுத்துகிறேன்” என்றும் உருக்கமாக அதில் கூறியுள்ளார்.

பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி சென்று செபிக்கும் அன்னை மரியா திரு உருவப்படம் உள்ள சிற்றாலயத்திற்கு அருகில் வெகு எளிமையானதாக இவரின் கல்லறை தயாரிக்கப்பட்டிருந்தது.

இலத்தீன் மொழியில் திருத்தந்தையின் பெயர் “பிரான்சிஸ்குஸ்” என்று மட்டுமே பொறிக்கப்பட்டுள்ள இந்த கல்லறைக்கான பளிங்கு கற்கள் இத்தாலியின் லிகூரியா மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்டது. அர்ஜென்டினா நாட்டிற்கு குடிபெயருமுன்னர் இத்திருத்தந்தையின் தாத்தா பாட்டி இம்மாநிலத்திலேயே வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேரி மேஜர் பெருங்கோவிலுக்குள் Salus Populi Romani என்ற பெயரில் அன்னை மரியா திரு உருவப்படம் வைக்கப்பட்டிருக்கும் பவுல் சிற்றாலயத்திற்கும் Sforza சிற்றாலயத்திற்கும் இடையே திருத்தந்தையின் கல்லறை இடம்பெற்றுள்ளது.

அன்னைமரியாவின் திருவுருவப்படம் வைக்கப்பட்டிருக்கும் சிற்றாலயம் 1611ஆம் ஆண்டு திருத்தந்தை ஐந்தாம் பவுல் அவர்களால் கட்டப்பட துவங்கியதால் பவுலின் சிற்றாலயம் என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது.

இச்சிற்றாலயத்திற்கு அருகில் இருக்கும் Sforza சிற்றாலயம் இரு சகோதர கர்தினால்களின் கல்லறைகளைத் தாங்கி நிற்கிறது. குய்தோ அஸ்கானியோ ஸ்போர்சா மற்றும் அலசாந்திரோ ஸ்போர்சா என்ற இரு கர்தினால் சகோதரர்கள் பிரபல கலைஞர் மைக்கல் ஆஞ்சலோ அவர்களின் துணையுடன் இச்சிற்றாலயத்தை வடிவமைக்கத் துவங்கினர். அவர்களின் குடும்பப் பெயரால் இந்த சிற்றாலயம் அறியப்படுகிறது.

இவ்விரு சிற்றாலயங்களுக்கும் இடையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கல்லறை தரையில் மிக எளிமையாக இடம்பெற்றுள்ளது.

By admin