திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஓர் இறை மனிதராக வாழ்ந்தாரென உரோமையிலுள்ள அனைத்துலக இயேசு சபைத் தலைவர் அருள்பணியாளர் அர்த்துரோ சோசா அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த 23ஆம் திகதி புதன்கிழமை உரோமையிலுள்ள இயேசு சபைத் தலைமையகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இவ்வாறு மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குப் புகழ்மாலை சூட்டிய இயேசு சபைத் தலைவர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டுமென்றோ அல்லது, தான் செய்யும் செயல்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டுமென்றோ விரும்பியதில்லையென சுட்டிக்காட்டி திருத்தந்தையின் வாழ்க்கையும் தலைமைத்துவமும் அவரது ஆன்மிக அனுபவத்திலும், இறைத்திருவுளப்படி வாழ்வதற்கான அர்ப்பணிப்பிலும் ஆழமாக வேரூன்றியிருந்ததுடன் உலகை அனைவருக்கும் நீதியான மற்றும் மனித மாண்பு நிறைந்த இல்லமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தன என்றும் எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மக்கள் செல்வாக்கால் இயக்கப்படவில்லை, மாறாக தெளிந்து தேர்தல், உரையாடல் மற்றும் இறைவேண்டலால் இயக்கப்பட்டாரென்றும், காலத்தின் அறிகுறிகளுக்கேற்ப செயல்படவும், கடவுளின் பரிவிரக்கத்தைப் பற்றிய அவரது புரிதலுக்கேற்ப வாழ்ந்திடவும் கடும் முயற்சி செய்தாரென்றும் மேலும் அவர் அச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிக்கல் நிறைந்த மனிதத் தன்மையை ஏற்றுக்கொண்டு, கலாச்சாரங்கள் முழுவதன் ஒன்றிப்பை ஆதரித்தாரென எடுத்துரைத்த அருள்பணியாளர் சோசா அவர்கள், திருத்தந்தை எப்போதும் சகோதரத்துவம், மனித மாண்பு மற்றும் ஒன்றிப்பை ஊக்குவித்தாரெனவும் கோடிட்டுக்காட்டியுள்ளார்.

இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குப்பின், திருஅவையின் எதிர்காலம் குறித்த கரிசனையை ஒப்புக்கொண்ட அருள்பணியாளர் அர்த்துரோ சோசா அவர்கள் அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதில் தூய ஆவியார் வழிகாட்டுவார் என்பதில் தனக்கு நம்பிக்கை உண்டு என்பதையும் செய்தியாளர்களிடம் வலியுறுத்தினார்.

By admin