தேசிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் அங்கீகாரத்துடன் தேசிய கத்தோலிக்க ஊடக நிலையமும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்திய தர்மபிரபாஸ்வர விருது வழங்கும் நிகழ்வு கடந்த 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி சத்துரு பிந்து மற்றும் தேசிய கத்தோலிக்க வெகுசன ஊடக மத்திய நிலைய இயக்குனர் அருட்தந்தை யூட் கிறிசாந்த ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தலைவர் பேரருட்தந்தை ஹெரல்ட் அன்ரனி பெரேரா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நிகழ்வை சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் தேசிய ரீதியாகவும் மறைமாவட்டங்கள் ரீதியாகவும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 41 கலைஞர்கள் தெரிவுசெய்யப்பட்டு விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
மறைமாவட்டங்கள் ரீதியாக மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழுக்கள் தமக்கு வழங்கப்பட்டிருந்த அறிவுறுத்தல்களின் பிரகாரம் பங்குத்தந்தையர்கள் ஊடாக கலைஞர்களை இவ்விருது பெறுவதற்காக தெரிவுசெய்து அனுப்பியிருந்தார்கள்.
யாழ். மறைமாவட்டத்திலிருந்து இசைத்துறையில் ஆனைக்கோட்டை பங்கை சேர்ந்த திரு. மடுத்தீனுப்பிள்ளை யேசுதாசன், நாடகத்துறையில் பாசையூர் பங்கைச் சேர்ந்த திரு. பிரான்சிஸ் யூல்ஸ் கொலின் மற்றும் மெலிஞ்சிமுனை பங்கை சேர்ந்த திரு. அந்தோனி யேசுதாஸ், ஊடகதுறையில் பாண்டியன்தாழ்வு பங்கைச் சேர்ந்த திரு. செல்மர் எமில் ஆகிய நால்வரும் மன்னார் மறைமாவட்டத்திலிருந்து நாடகத்துறையில் மன்னார் பேராலய பங்கை சேர்ந்த திரு. அந்தோனி மரியநாயகம் அல்மேடோ, நாடாக எழுத்துத் துறையில் திரு எமிலியன் ஸ்ரீபன் சுகந்தரூபன் கூஞ்ஞ ஆகிய இருவரும் திருகோணமலை மறைமாவட்டத்திலிருந்து கட்டிட நிர்மாண துறையில் திரு. அன்ரன் ராகேல், சமூக சேவை துறையில் திருமதி அந்தோனிதாஸ் சகாயமேரி ஆகிய இருவரும் மட்டக்களப்பு மறைமாவட்டத்திலிருந்து எழுத்து துறையில் திரு. அன்ரனி சத்தியசீலன் பாய்வா, நாடகத் தறையில் திரு. ஜெயக்கொடி டேவிட் ஆகிய இருவரும் இவ்விருதுகளை பெற்றுக்கொண்டார்கள்.
2018ஆம் ஆரம்பிக்கப்பட்ட இவ்விருது வழங்கும் நிகழ்வு நான்காவது தடவையாக இவ்வருடம் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் மறைமாவட்ட பங்குகள் ரீதியாக பல் துறைகளிலும் பணியாற்றும் கலைஞர்களை கௌரவித்து அவர்களின் பணியின் பெருமைகளை வெளிக்கொணர்வதாக இந்நிகழ்வு அமைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.