யாழ்ப்பாண தமிழ்சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ்தூது தனிநாயகம் நினைவரங்கம் 04ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் பிரதான வீதி மடத்தடி சந்தியில் அமைந்துள்ள தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வுடன் மலரஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றன. மலர் மாலைகளை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க பெருந்தலைவர் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களும் அணிவித்தார்கள். தொடர்ந்து மலரஞ்சலி நிகழ்வு அங்கு இடம்பெற்றது.
அரங்க நிகழ்வுகள் யாழ்ப்பாணம் தமிழ்ச்சங்க உபதலைவர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்றன. இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக கல்வியியற்துறை விரிவுரையாளர் திரு. சர்வேஸ்வரா அவர்கள் கலந்து ‘இலங்கை பல்கலைக்கழக முறைமையில் சேர். பொன் அருணாசலத்தின் வகிபாகம்’ என்ற தலைப்பில் இவ்வருடத்திற்கான நினைவுப்பேருரையை ஆற்றினார்.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், யாழ்ப்பாணம் தமிழ்ச்சங்க தலைவர் பேராசிரியர் வேல்நம்பி, பெருந்தலைவர் பேராசிரியர் சண்முகதாஸ், சங்க ஆட்சி குழு உறுப்பினர் திரு. நா. குமரிவேந்தன், பொதுச் செயலாளர் செந்தமிழ்ச்சொல்லருவி திரு. லலீசன், திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குனர் திரு. யோன்சன் ராஜ்குமார், குருக்கள், துறவிகள், பாடசாலை, குருமட மற்றும் பல்கலைக்கழக மாணவர்களென பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.