சுவாமி ஞானப்பிரகாசியார் அவர்களின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் தமிழுக்கும் மறைக்கும் ஆற்றிய பணியை வெளிக்கொணரும் நோக்கில் சிறப்பு நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கான ஆயத்த கூட்டம் கடந்த 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக், யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜேறோ செல்வநாயகம், அருட்தந்தை மங்களராஜா, அமலமரித்தியாகிகள் சபை நலநோம்பு நிலைய இயக்குநர் அருட்தந்தை அன்புராசா, அமலமரித்தியாகிகள் சபையின் சமதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான நிறுவன இயக்குனர் அருட்தந்தை ஜீவரட்னம், யாழ். மறைமாவட்ட சமூக தொடர்பு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன், வெண்புரவி நகர் நிறுவனர் அருட்தந்தை அமிர்த ஜெயசேகரம், அருட்தந்தை அன்ரனிபாலா, திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குனர் திரு. ஜோண்சன் ராஜ்குமார் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
1901ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட சுவாமி ஞானப்பிரகாசியார் அவர்கள் தமிழுக்கும் மறைக்கும் அளப்பரிய பங்காற்றியுள்ளார்.
தமிழ், ஆங்கிலம், சிங்களம், இலத்தீன், பிரெஞ்ச் உள்ளிட்ட 72 மொழிகளில் புலமைவாய்ந்த இவர் 50க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றி 30க்கும் அதிகமான நூல்களை அச்சேற்றியுள்ளார்.
நல்லூரை தளமாககொண்டு எளிமையான சன்னியாச வாழ்வை இவர் வாழ்ந்தமையாலும் மெய்யியல் ரீதியான இந்து மதத்தினையும் அதன் பாரம்பரியத்தையும் அறிந்திருந்தமையாலும் இவரது கருத்துக்களும் இவரது வாழ்க்கை முறைமையும் அதிகமாக இந்துசமய மக்களால் விரும்பப்பட்ட பின்னணியில் இவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் எனவும் அழைக்கப்படுகின்றார்.
இவரது பணியை கௌரவித்து ஜேர்மன் நாட்டில் 1939ஆம் ஆண்டு அஞ்சல் நினைவு முத்திரையும் தொடர்ந்து இலங்கை அரசினால் 1981 வைகாசி மாதம் 22ஆம் திகதி அவரது படத்துடன் கூடிய அஞ்சல் நினைவு முத்திரையும் சிறப்பு முதல் நாள் உறையும் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.