சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட காட்சி சிலுவைப்பாதை தியானம் கடந்த 29ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் தலைமையில் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் “சிலுவையோடு பயணம்” எனும் மையக்கருவில் சிலுவைப்பாதை நிலைகள் இளையோரின் நடிப்பில் காட்சிப்படுத்தப்பட்டு தியானம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுண்டுக்குளி பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்கள் கலந்துகொண்டார்.

அத்துடன் சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால பாத யாத்திரை கடந்த 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்பாதயாத்திரை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆரம்பமாகி சூராவத்தை புனித திரேசாள் ஆலயத்தின் ஊடாக ஏழாலை புனித இசிதோர் ஆலயத்தை சென்றடைந்து அங்கு நடைபெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.

திருப்பலியை தொடர்ந்து உயிர்த்த ஆண்டவர் சமூகத்தால் குணமாக்கல் வழிபாடும் முன்னெடுக்கப்பட்டது.
இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை, குணமாக்கல் வழிபாடு என்பவற்றை உள்ளடக்கிய இவ்வழிபாடுகளில் 500 வரையான பங்குமக்கள் பக்தியுடன் கலந்துகொண்டனர்.
மேலும் சூராவத்தை புனித திரேசாள் ஆலய மக்களால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை கடந்த 15ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

இத்தவக்கால யாத்திரையில் இறைமக்கள் மாங்குளம் புனித அக்னேஸ் அம்மா திருத்தலம், வவுனிக்குளம் கல்வாரிப் பூங்கா, சிப்பியாறு அந்தோனியார் ஆலயம், மன்னார் மடு திருத்தலம் ஆகியவற்றை தரிசித்ததுடன் வவுனிக்குளம் கல்வாரிப் பூங்காவில் நடைபெற்ற சிலுவைப்பாதை தியானம், திருப்பலி, நற்கருணை ஆராதனை, பாவசங்கீர்த்தன அருட்சாதனம் என்பவற்றில் பங்குபற்றினர்.

இந்நிகழ்வில் 25 வரையானவர்கள் கலந்துகொண்டனர்.

By admin