Catholic care for children SriLanka அமைப்பில் சிறுவர் பாதுகாப்பு டிப்ளோமா கற்கைநெறியை மேற்கொள்ளும் திருக்குடும்ப கன்னியர் மட யாழ். மாகாண அருட்சகோதரிகளின் ஏற்பாட்டில் கன்னியர்மட விடுதி மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறுவர் தின சிறப்பு நிகழ்வு கடந்த 16,17ம் திகதிகளில் நடைபெற்றது.
மாகாணத்தலைவி அருட்சகோதரி தியோபின் குரூஸ் அவர்களின் தலைமையில் இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுக்கள், கலைநிகழ்வுகள், திருப்பலி என்பன இடம்பெற்றன. 16ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன.
இளவாலை, யாழ்ப்பாணம், மன்னார், பண்டிவிரிச்சான், உருத்திரபுரம், நானாட்டான், வவுனியா, ஹப்புதளை மற்றும் ஊர்காவற்துறை ஆகிய இடங்களிலிருந்து வருகைதந்த 210 விடுதிச்சாலை மாணவிகளை Jesus, Mary, Joseph என மூன்று அணிகளாக பிரித்து முன்னெடுக்கப்பட்ட இவ்விளையாட்டு நிகழ்வுகளை அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்கள் தலைமையிலான மானிப்பாய் திருக்குடும்ப இளையோர் குழுவினர் வழிநடத்தினர்.
தொடர்ந்து 17ஆம் திகதி திருப்பலியும் திருப்பலி நிறைவில் மாணவிகளின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. திருப்பலியை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அதிபர் அருட்தந்தை மயூரன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலியை தொடர்ந்து நடைபெற்ற கலைநிகழ்வுகளில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரெட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் வைத்திய கலாநிதி திரு. சிவதாஸ் மற்றும் Catholic care for children SriLanka அமைப்பின் இணைப்பாளர் அருட்சகோதரி மெற்றில்டா பிரான்சிஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் அருட்சகோதரி பிறிஜிற் கபிரியேற்பிள்ளை அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகெண்டதுடன் மாகாண ஆலோசக அருட்சகோதரிகள் அன்ரனீற்றா மார்க், விஜயா ஜோசப், புறோத்மேரி மரியானந்தம், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பெற்றோர்களென பலரும் கலந்து சிறப்பித்தனர்.