குருநகர் புனித யாகப்பர் ஆலய புனித யோசப்வாஸ் இளையோர் மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட கலைவிழா நிகழ்வு கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருநகர் கலையரங்கில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் வழிநடத்தலில் மன்ற தலைவர் செல்வன் கிறகோரி ஜெயராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.
தெற்காசிய 20வயது உதைபந்தாட்ட தொடரில் விளையாடிய குருநகரை சேர்ந்த செல்வன் ஜோன் ஜிம்றோன் கரிஸ், செல்வன் ரூபன் மதுமிதன், அவுஸ்திரேலியா கிறிபித் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானத்துறை உயர் பட்டப்படிப்பை மேற்கொண்டு கலாநிதி பட்டம் பெற்ற செல்வி ஜெயக்குமார் சமந்தா தாரணி, 2023 உயர்தரப்பரீசைக்கு தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய குருநகரை சேர்ந்த 12 மாணவர்கள் மற்றும் இளையோர் மன்ற முன்நாள் தலைவர்கள், சாதனையாளர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
கலை நிகழ்வுகளாக ஆசிரியை திருமதி சுதர்சினி கரன்சன் அவர்களின் நெறியாள்கையில் தில்லானா நடனம், யூபிலி ஆண்டில் இறை திட்டம் தேடும் இளையோர் எனும் தலைப்பில் வில்லுப்பாடல், யாழ். கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திரு. ஜோண்சன் ராஜ்குமார் அவர்களின் எழுத்துருவாக்கத்தில், திரு. அரியநாயகம் அன்று யூலியஸ் அவர்களின் நெறியாள்கையில் மிக்கேல் வானதூதரின் வரலாற்றை சித்தரிக்கும் விண்ணக வீரன் வடமோடிக்கூத்து போன்ற கலைநிகழ்வுகள் மேடையேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் இளையோர் மன்ற மகிமை அங்கத்தவரும் PR கடல் உணவு வாணிப உரிமையாளருமான திரு. பிலுப்புராசா றெக்ஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் மகளிர் மன்ற மகிமை அங்கத்தவரும் நல்லூர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தருமான திருமதி. ஜெரால்டின் ரகுநாதன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டதுடன் அருட்தந்தையர்கள் அருட்சகோதரர்கள் பார்வையாளர்களென ஏராளமானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.