யாழ். மறைமாவட்டம் மணியந்தோட்டம் பங்கிற்குட்பட்ப கிழக்கு அரியாலை பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித வேளாங்கன்னி அன்னை யாத்திரைத்தல கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழாவும் வருடாந்த திருவிழாவும் 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
மணியந்தோட்டம் பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை வரதன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருவிழா திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம், அருட்தந்தையர்கள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.
யுத்தத்தினால் சேதமடைந்த இவ் யாத்திரைத்தலத்திற்கான அடிக்கல் யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களால் கடந்த 2024ஆம் ஆண்டு ஆவணி மாதம் 17ஆம் நாட்டப்பட்டு அவரது கண்காணிப்பின் கீழ் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதுடன் இக்கட்டுமானப்பணிக்கான பெரும் நிதி பங்களிப்பினை யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்களும் மீதித்தொகையினை உள்நாட்டு மற்றும் புலம்பெயர் இறைமக்களும் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.