வருகின்ற 15ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள கச்சதீவு திருவிழாவில் முதல் முறையாக இந்தியா நாட்டிலிருந்து ஓர் ஆயர் கலந்துகொள்ளவுள்ளதாக யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை லூர்து ஆனந்த் அவர்களே இவ்விழாவில் கலந்துகொள்ள உள்ளதுடன் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களும் குருக்கள், துறவிகளும் இவ்விழாவில் பங்கேற்றவுள்ளதாகவும் யாழ். மாவட்ட செயலக கூட்டத்தின் நிறைவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த தவக்கால திருயாத்திரை திருவிழாவிற்கான ஆயத்த வேலைகள் அங்கு முன்னெடுக்கப்பட்டு நடைபெற்றுவரும் நிலையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் கடந்த 06ஆம் திகதி, வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் முதலாம் கட்ட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டதுடன் இவ்வருடம் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகைதரவுள்ள பக்தர்களுக்கான பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து, உணவு மற்றும் தொலைத்தொடர்பு வலையமைப்பு வசதிகளுக்கான அனுமதி போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் திருவிழாவிற்கு வருகைதரும் பக்தர்கள் தங்கள் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியவை உள்ளடங்கிய தாளை குறிகாட்டுவான் இறங்குதுறையில் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், மேலதிக அரசாங்க அதிபர், வட மாகாண பிரதி கடற்படை கட்டளை தளபதி, மாவட்ட பிரதம கணக்காளர், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர்கள், கடற்படை அதிகாரிகள், பிரதேச சபை பிரதிநிதி, யாழ்ப்பாண சாரணர் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

By admin