யாழ்ப்பாணத்தின் பிரசித்தி பெற்ற ஓவியரான திரு. அ. மாற்கு அவர்களின் மாணவர்களும் அவரது குடும்பத்தினரும் இணைந்து முன்னெடுத்த மாற்குவின் கலை அம்பலம் காண்பியக் கண்காட்சி கடந்த 13ஆம் திகதி ஆரம்பமாகி 16ஆம் திகதி வரை மன்னார் வயல் வீதிஇ சின்னக்கடை பிரதேசத்தில் நடைபெற்றது.

இலங்கைத் தமிழர் மத்தியில் நவீன ஓவியத்தை பிரபலப்படுத்திய ஓவியர் மாற்கு அவர்களின் கலைப்படைப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட இக்கண்காட்சியில் வெவ்வேறு காலகட்டங்களில் இவரால் உருவாக்கப்பட்ட பல்வேறு பாணிகளிலான ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

ஓவியர் திரு. அ. மாற்கு 1933ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் குருநகரில் பிறந்து புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்விகற்றார். இவர் சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதிலும் சிற்பங்கள் செய்வதிலும் விருப்பம் கொண்டிருந்தார்.

தனது ஆரம்ப ஓவியப் பயிற்சியை ஓவியர் எஸ். பெனடிக்ற் அவர்களிடம் பெற்றுக்கொண்ட இவர் கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் இணைந்து ஐந்து வருடங்கள் பயின்று பட்டம் பெற்றார்.

இவர் 1958-1967 வரையான காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஓவியர் எம். எஸ் கந்தையாவினால் உருவாக்கப்பட்ட “விடுமுறைக்கால ஓவியக் கழகத்தில்” இணைந்து இளையவர்களுக்கு ஓவியத்தை கற்றுக் கொடுத்ததுடன் தொடர்ந்து பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் பின்னர் கொக்குவில் இந்து கல்லூரியிலும் ஓவிய ஆசிரியராக பணியாற்றினார்.

அத்துடன்இ 1960களின் இறுதியில் இயங்காது போன “விடுமுறை ஓவியக் கழகத்தை” 1980களின் மத்தியில் வீட்டில் உருவாக்கியதுடன் தொடர்ந்து திருமறைக்கலாமன்றத்தின் கவின் கலைகள் பயிலகத்தின் உருவாக்கத்தில் இணைந்து ஓவியத்தை ஒரு பாடமாக அங்கு கற்பித்துவந்தார்.

1995ஆம் ஆண்டு யாழ் குடாநாட்டு இடப்பெயர்வில் இடம்பெயர்ந்து கிளாலியிலும், வன்னியிலும், மன்னாரிலும் வாழ்ந்த காலங்களிலும் தொடர்ந்து நூற்றுக்கணக்கானவர்களுக்கு ஆசானாக திகழ்ந்ததுடன் மான்னாரில் வாழ்ந்தபோது ஆயிரத்திற்கும் அதிகமான ஓவியங்களை வரைந்துமுள்ளார்.

இவரின் மாணவர்களில் பலர் இன்றும் உலகின் பல பாகங்களில் ஓவியர்களாக வாழ்ந்துவருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin