ஊர்காவற்துறை பரலோக அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 15ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட அகவொளி நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 14ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
நற்கருணைவிழா திருப்பலியை தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பேனாட் றெக்னோ அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருவிழா அன்று மாலை அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றதுடன் திருவிழாவை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட ஓவியம், பாட்டு, கவிதை மற்றும் நவநாட்கால மறையுரைகளை அடிப்படையாகக் கொண்டு நடாத்தப்பட்ட வினாவிடைப்போட்டி என்பவற்றில் கலந்து வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.


