2023ம் ஆண்டு வத்திக்கானில் நடைபெறவுள்ள உலக ஆயர்மன்றத்திற்காக யாழ். மறைமாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஆயத்தப்பணிகளில் ஒன்றாக வினாக்கொத்துக்கள் வழங்கி கருத்துக்கணிப்பு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இறைமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களைத் தொகுக்கும் பணியை மேற்கொண்டுவரும் குருமுதல்வர் தலைமையிலான குழுவினர் கடந்த 31ம் திகதி வியாழக்கிழமை ஆயர் இல்லத்தில் கூடி தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்தனர்.திரு அவையை விட்டு ஒதுங்கியிருப்போர் பற்றிய கருத்துக்கள் ஆராயப்பட்டபோது ஆலயங்களில் சிலருடைய பரம்பரை ஆதிக்கம் காரணமாக பலர் ஒதுங்கியிருக்கிறார்கள் என்ற கருத்து பரவலாக தெரிவிக்கப்பட்டுள்ளது அவதானிக்கப்பட்டது. அத்துடன் கல்விக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தினால் பலர் ஆலய செயற்பாடுகளுக்கும் விசுவாச செயற்பாடுகளுக்கும் முன்னுரிமை கொடுக்காமல் ஒதுங்கியிருக்கிறார்கள் என்ற கருத்தும் கண்டறியப்பட்டது. இவை தவிர சாதிக் கொடுமைகள், குருக்களின் இல்லத்தரிசிப்பு இல்லாமை, குருக்களின் செயற்பாடுகளில் திருப்தியற்றோர், அதிகார துஸ்பிரயோகம், ஆன்மீக உரையாடல் இன்மை, கலப்புத் திருமணம், சுயநல வாழ்க்கை, ஏனைய சபைகளை நாடுதல், குருக்கள் மற்றும் பொதுநிலையினருக்கிடையிலான இடைவெளி அதிகரித்தல், சமூக அக்கறையின்மை, பங்கு பணிகள் பகிரப்படாமை, பெற்றோரின் ஊக்கமின்மை, அதீத குடும்ப பெறுப்புக்கள், ஆடம்பரமான வாழ்க்கை முறைகள், கலப்பு திருமணம் செய்தவர்கள், வேறு மதங்களில் இருந்து வந்தவர்கள், போன்ற காரணங்ஙகளாலும் பலர் திரு அவையிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்கள் எனவும் கருத்துக்கணிப்பில் கண்டறியப்பட்டுள்ளது.