இலங்கை தமிழ் திரு அவையில் தற்போது பயன்பாட்டிலுள்ள இந்தியா நாட்டில் அச்சிடப்பட்ட திருப்பலி நூலை இலங்கை தமிழ் திரு அவைக்கு ஏற்றதாக மாற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பான கலந்துரையாடல் வத்திக்கான் திரு அவை தலைமைப்பீட வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் ஒழுங்குபடுத்தலில் மன்னார் மடு திருத்தலத்தில் கடந்த 24ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய வழிபாட்டு ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை இந்திரஜித், யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம்,மட்டக்களப்பு மறைமாவட்ட அருட்தந்தை அன்ரனி ஜெயராஜ் திருகோணமலை மறைமாவட்ட அருட்தந்தை கிங்சிலி றொபேட் , நற்கருணைநாதர் சபையின் மாகாண முதல்வர் அருட்தந்தை சௌகான், ஆசீர்வாதப்பர் சபையை சேர்ந்த முன்னாள் தேசிய வழிபாட்டு ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை சூசைநாதன் மற்றும் யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை சுரேந்திரராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலில் தற்போது பாவனையிலுள்ள திருப்பலி நூல் தொடர்பாகவும், வத்திக்கான் திருப்பலி நூலுக்கும் இந்நூலுக்கிடையிலுள்ள வித்தியாசங்கள், இலங்கை தமிழ் திரு அவைக்கு ஏற்றவிதமாக இந்நூலில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
தற்போது இலங்கை தமிழ் திரு அவையில் பயன்படுத்தப்படும் திருப்பலி நூல் இந்தியா நாட்டு தமிழ் திரு அவைக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டதென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.