வட்டக்கச்சி இராமநாதபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித ஆரோக்கியநாதர் முன்பள்ளி கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா 11ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வட்டக்கச்சி முன்னாள் பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து முன்பள்ளியை ஆசீர்வதித்து திறந்துவைக்க நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ACNS நிறுவன பணியாளர் திருமதி மார்த்தா வான் சோரென் அவர்கள் நினைவுக்கல்லை திரைநீக்கம் செய்துவைத்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பெற்றோர்கள், முன்பள்ளி சிறார்கள், நிறுவன பணியாளர்கள், பங்கு மக்களென பலரும் கலந்துகொண்டனர்.
அத்துடன் பூநகரி புனித அடைக்கல அன்னை ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள முன்பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 12ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
முன்பள்ளிக்கான அடிக்கல்லை கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்கள் ஆசீர்வதிக்க நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ACNS நிறுவன பணியாளர் திருமதி மார்த்தா வான் சோரென் அவர்கள் நாட்டிவைத்தார்.
தொடர்ந்து அன்றைய நாளை சிறப்பித்து ஆலய வளாகத்தில் பயன்தரு மரக்கன்றுகளும் நாட்டிவைக்கப்பட்டன. இக்கட்டடங்களிற்கான நிதிப்பங்களிப்பை நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ACNS நிறுவனம் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.