ஆசியாவின் முன்னணி இறையியலாளர்களில் ஒருவரான அருட்தந்தை Felix Wilfred அவர்கள் 7ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டு 76 வயதில் இறைபதமடைந்துள்ளார்.

புகழ்பெற்ற இந்திய இறையியலாளரான அருட்தந்தை Felix Wilfred அவர்கள் இறையியல், சமூக நீதி மற்றும் ஏழைகள், பொதுநிலையினருக்காக வாதிடுவதில் திருஅவையின் பங்கு பற்றிய இவரது தீவிர முற்போக்கான கருத்துக்களுக்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டார்.

அனைத்துலக இறையியல் மறுஆய்வுக் குழுவின் தலைவராகவும், மறைந்த திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டின் கீழ் செயல்பட்டுவந்த வத்திக்கானின் அனைத்துலக இறையியல் ஆணையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றிய இவர் எல்லோராலும் அணுகக்கூடியவராகவும் ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு அவர் வழிகாட்டியாகவும் விளங்கியவர்.

அத்துடன் இவர் ஆசிய ஆயர் பேரவையின் இறையியல் பணிகள் அலுவலகத்தின் செயலாளராகவும் பணியாற்றயதுடன் இந்திய இறையியல் கழகத்தையும் வழிநடத்தினார். இறையியல் புலமை, மதங்களுக்கு இடையிலான உரையாடல், சமூக நீதி ஆகியவற்றில் அருள்பணியாளர் Felix Wilfred அவர்களின் பங்களிப்பு மகத்தானது.

அவர் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியா உட்பட பல பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்பித்தாதேடு டப்ளின் மூவொரு கடவுள் கல்லூரியில் (Trinity College Dublin) இந்திய ஆய்வுகளின் தலைவராகப் பணியாற்றியதுடன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், கல்விநிலைய முதல்வராகவும் சேவைபுரிந்தார்.

கோட்டார் மறைமாவட்டத்தின் குருவாகிய அருட்தந்தை வில்பிரட் அவர்கள் 1972ஆம் ஆண்டில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டு 2014ஆம் ஆண்டில் குழித்துறை மறைமாவட்டம் புதிதாக உதயமானபோது, அவர் அதன் அங்கமானார்.

பல்மொழியாளராகவும் விளங்கிய அருட்தந்தை Wilfred அவர்கள் பல நூல்களை எழுதியுள்ளார், ஆசிய கிறிஸ்தவத்தின் ஆக்ஸ்போர்டு கையேடு, மத அடையாளங்கள், போன்ற நூல்கள் அறிவுப்புலத்தில் மதிப்புக்குரியதாகக் கருதப்பட்டன.

அருட்தந்தை அவர்கள், 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்ற பிறகு திடீரென மரணமடைந்தமை இறையியல் சமூகத்தைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

By admin