உரோம் பெருநகருக்கு வடக்கேயுள்ள சிவித்தாவெக்கியா துறைமுக நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டவருடைய இரவு விருந்து திருப்பலியை நிறைவேற்றி, 12 கைதிகளின் காலடிகளைக் கழுவினார்.1
4ஆம் திகதி புனித வியாழக்கிழமை சிவித்தாவெக்கியா நகரிலுள்ள சிறைக்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இத்தாலியின் நீதித்துறை அமைச்சர் உள்ளிட்ட அச்சிறை அதிகாரிகள், பாதுகாப்புப் பணியாளர்கள், மற்றும், சில கைதிகள் வரவேற்றனர். அதற்குப்பின்னர், அச்சிறையின் சிற்றாலயத்தில், ஆண்டவர் திருநற்கருணையை ஏற்படுத்தியதை நினைவுகூரும் ஆண்டவருடைய இரவு விருந்து திருப்பலியை நிறைவேற்றி, 12 கைதிகளின் காலடிகளையும் கழுவினார். திருப்பலியின் இறுதியில், அச்சிறையின் இயக்குனர் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார். மேலும், அவர், சிவித்தாவெக்கியா பழங்காலத் துறைமுகத்தைச் சித்தரிக்கும் ஒரு படம், மற்றும், கைதிகளால் பயிரிடப்பட்ட காய்கறிகள் ஆகியவற்றை திருத்தந்தையிடம் கொடுத்தார். பின்னர் அச்சிறையிலுள்ள ஓர் அறையில், கைதிகள், அதிகாரிகள், மற்றும், பணியாளர்கள் என ஏறத்தாழ ஐம்பது பேரைச் தனித்தனியே சந்தித்து வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.