அமலமரித்தியாகிகள் சபையின் அதி உயர் தலைவர் அருட்தந்தை லூயிஸ் இஞ்ஞாசியோ றோய்ஸ் அலோன்சா அவர்கள் இலங்கை நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இலங்கையிலுள்ள அமலமரித்தியாகிகள் சபையின் இரண்டு மாகாணங்களையும் தரிசிக்கவுள்ளார்.

இம்மாதம் 14ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரை கொழும்பு மாகாணத்திலுள்ள அமலமரித்தியாகிகளின் பணித்தளங்களையும் இம்மாதம் 24ம் திகதி தொடக்கம் வருகின்ற மாதம் 2ம் திகதி வரை யாழ். மாகாணத்திலுள்ள அமலமரித்தியாகிகளின் பணித்தளங்களையும் தரிசிக்கவுள்ளார்.

யாழ். மாகாணத்தில் அமலமரித்தியாகிகள் பணியாற்றுகின்ற பணித்தளங்கள், உருவாக்கல் இல்லங்கள் மற்றும் இறைமக்களை சந்திக்கவுள்ள இவர் யாழ். மறைமாவட்டத்தில் 29ம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அருட்சகோதரர்களின் நித்திய வார்த்தைப்பாடு மற்றும் 31ம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்குகளில் பங்கேற்கவுள்ளார்.

1963 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் பிறந்த இவர் 1988 ஆம் ஆண்டு குருவாக திருநிலைபடுத்தப்பட்டு ஸ்பெயின் நாட்டின் பல இடங்களிலும் பணியாற்றியிருந்தார்.

2017 தொடக்கம் 2022 வரை மேற்கு சகாராவில் பணியாற்றிக்கொண்டிருந்த போது 2022ம் ஆண்டு புரட்டாதி மாதம் உரோமாபுரியில் இடம்பெற்ற சபையின் 37வது பொது அமர்வில் சபையின் 14 ஆவது அதிஉயர் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

By admin