யாழ். திருமறைக்கலாமன்றத்தின் தாயரிப்பான ‘வெள்ளியில் ஞாயிறு’ திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகை கடந்த 10 ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மன்ற திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது.

பிரமாண்டமான அரங்க அமைப்பு, காட்சியமைப்பு, இசையமைப்பு, ஒலி, ஒளி போன்றவற்றுடன் அரங்கிலும், அரங்கப் பின்னணியிலும் இருநூறுக்கும் அதிகமான கலைஞர்களின் பங்கேற்புடன் நான்கு நாட்கள் மேடையேற்றப்பட்ட இத்தவக்கால ஆற்றுகையில் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் வருகைதந்;த பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் பக்திபூர்வமாக இணைந்துகொண்டனர்.

ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவின் மரணத்திற்குப்பின் குழப்பமும் பயமும் சூழ்ந்த நிலையில் எம்மாவுஸ் நோக்கிய சீடர்களின் பயணத்தோடு ஆரம்பமாகும் “வெள்ளியில் ஞாயிறு” திருப்பாடுகளின் காட்சி வழிப்போக்கனாக அவர்களுடன் இணைந்துகொண்ட இயேசுவின் உடன்பயணிப்பில் பின்நோக்கி நகர்ந்து மீட்பின் வரலாற்றை முழுவதுமாக புரிந்துகொள்ளவைக்கும் புதுமையான காட்சியமைப்புக்களை தத்துருபமாக வெளிக்கொணர்வதாக அமைந்திருந்தது.

இவ்வாற்றுகை முதன் முதலாக 2010ஆம் ஆண்டிலும், அதனைத் தொடர்ந்து 2018 ஆண்டிலும் மேடையேற்றப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுக்கொண்டதுடன் மன்ற பிரதி இயக்குநர் திரு. யோன்சன் ராஜ்குமார் அவர்களின் நெறியாள்கையில் தற்போது மீண்டும் மேடையேற்றப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin