யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட மறையாசிரியர்களுக்கான ஒரு மாதகால வதிவிடப்பயிற்சியை நிறைவுசெய்த மறையாசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 06ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருழுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் திருப்பலியும் தொடர்ந்து மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் வதிவிட பயிற்சியை நிறைவுசெய்த மறையாசிரியர்களின் கலைநிகழ்வுகளும் அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து பயிற்சியை நிறைவுசெய்த யாழ். மறைமாவட்டத்தின் ஆறு மறைக்கோட்டங்களை சேர்ந்த 26 மறையாசிரியர்களுக்கான சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் அருட்தந்தை ஜெபரட்ணம், அருட்தந்தையர்கள், மறையாசிரியர்களின் பெற்றோர்களென பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து மறையாசிரியர் பயிற்சியை நிறைவுசெய்தவர்களும் யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை இறுதியாண்டு மாணவர்களும் இணைந்து 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் திருகோணமலை மறைமாவட்டத்திற்கு யாத்திரை மேற்கொண்டு அங்கு குவாடலூப்பே அன்னை திருத்தலத்தை தரிசித்து பரிபாலகர் அருட்தந்தை யூட் ஜோன்சன் அவர்களுடன் உரையாடல் மேற்கொண்டு அத்திருத்தலத்தின் வரலாற்று சிறப்புக்களை அறிந்து கொண்டதுடன் அங்கு அமைந்துள்ள பிரசித்திபெற்ற சில இடங்களையும் பார்வையிட்டனர்.

By admin