யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்படிப்புகள்பீட கிறிஸ்தவ கற்கைகளில் முதுமாணி கற்கை நெறியின் முதலாவது அணியினரால் முன்னெடுக்கப்பட்ட கல்விச் சுற்றுலா கடந்த 8ஆம், 9ஆம் திகதிகளில் நடைபெற்றது.
கற்கை நெறியின் இணைப்பாளர் பேராசிரியர் அருட்தந்தை போல் றொகான் அவர்களின் ஏற்பாட்டில் விரிவுரையாளர்கள் அருட்தந்தை இரவிச்சந்திரன் மற்றும் திருமதி வினிபிறிடா சுரேந்திரராஜ் ஆகியோரின் உதவியுடன் இலங்கைக் கிறிஸ்தவ வரலாற்றின் வேர்களைத் தேடி என்ற மையப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட இக்கற்றல் பயணத்தில் மாணவர்கள் போர்த்துக்கேயர் காலத்திலிருந்தே இலங்கைக் கிறிஸ்தவத்தின் வேர்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் மன்னார் மறைமாவட்டத்திற்கு சென்று அங்குள்ள பிரசித்திபெற்ற இடங்களை தரிசித்து அவற்றின் வரலாற்று சிறப்புக்களை அறிந்து கொண்டார்கள்.
மருதமடு அன்னை திருத்தலம், முத்தரிப்புத்துறையில் அமைந்துள்ள புராதன தொல்லியல் சின்னமான அல்லிராணிக் கோட்டை, வங்காலை புனித அன்னாள் ஆலயம் ,மன்னார் புனித செபஸ்தியார் பேராலயம், தோட்டவெளிப் பிரதேச மறைச்சாட்சிகளின் திருத்தலத்தலம், பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயம், தலைமன்னார், மாந்தை மரியன்னை ஆலயம் ஆகிய இடங்களை தரிசித்து அவற்றின் சிறப்புமிக்க வரலாற்று தகவல்களை அறிந்துகொண்டதுடன் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மறைக்கல்வி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த கல்வி என்னும் மையக்கருத்தில் கருத்தமர்வு ஒன்றிணையும் நடாத்தியிருந்தனர்.