யாழ். மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட குருக்கள் தின சிறப்பு நிகழ்வு 14ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் திருச்செபமாலை, கூட்டொருங்கியக்க மாநாட்டின் இறுதி ஆவண கருத்தமர்வு, குருக்களுக்கான ஒன்றுகூடல் என்பன இடம்பெற்றன.
தொடர்ந்து குருக்கள் யூபிலி கதவின் ஊடாக யாழ். புனித மரியன்னை பேராலயத்திற்குள் நுழைந்து அங்கு நடைபெற்ற நற்கருணை ஆராதனை, ஒப்புரவு அருளடையாளம் என்பவற்றில் பங்குபற்றினர். இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் 150ற்கும் அதிகமான குருக்கள் பங்குபற்றியிருந்தனர்.
அத்துடன் அன்றைய தினம் மாலை திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு திருப்பலி யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்திருப்பலியில் திருத்தைலம் மந்திரிப்பும் குருக்களுக்கான குருத்துவ வாக்குறுதிகளை புதுப்பிக்கும் திருச்சடங்கும் இடம்பெற்றன.
இத்திருப்பலியில் குருக்கள் துறவிகள் அருட்சகோதர்கள் குருமட மாணவர்கள் இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.