இலங்கையின் தென்பகுதி மற்றும் வடபகுதி சர்வமத அமைப்புக்களை சேர்ந்த மத தலைவர்களுக்கான கலந்துரையாடல் 7ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை யாழ். கியூடெக்க கரித்தாஸ் நிறுவனத்தில் நடைபெற்றது.
வணக்கத்துக்குரிய பேராசிரியர் பள்ளேகந்த ரத்னசார மகாதேவோ தேரோ அவர்கள் தலைமையில்
தென்பகுதியிலிருந்து வருகைதந்த சாம்சம் மற்றும் தர்ம சக்தி சர்வமத அமைப்புக்களை சேர்ந்த குழுவினர் வடபகுதி மதத்தலைவர்களுடன் நாட்டில் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் பற்றி ஆராய்ந்தானர்.
இக்கலந்துரையாடலில் வடபகுதி மதத்தலைவர்கள் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் காணி மற்றும் காணாமல் போனோர் பிரச்சனைகள், ராணுவ ஆக்கிரமிப்பு அத்துடன் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை ஆகியவை பற்றி எடுத்துரைத்தார்கள். இதன்போது, தென்பகுதி மதத்தலைவர்கள் சார்பாக பதில் அளித்த வணக்கத்துக்குரிய களுப்பான பியரத்னா தேரோ அவர்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக முதன்முதலாக 13 வது திருச்சத்தட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு அதற்கும் மேலாக தமிழ் மக்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்றும் உறுதி அளித்தார். ராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் பற்றி தாங்கள் அரசாங்கத்துக்கு தெளிவாக எடுத்துரைத்திருப்பதாகவும் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் காணாமல் போனோர் பிரச்சனை பற்றி தாங்கள் மிகவும் கரிசனையோடு ஆராய்ந்து வருவதாகவும் இதற்குரிய தீர்வுகள் விரைவில் கிடைப்பதற்கு ஆவன செய்வதாகவும் கூறினார்.
இலங்கையில் சமத்துவமும் சமாதானமும் ஒற்றுமையும் ஏற்படுவதற்கு இலங்கையில் உள்ள சகல மதத்தலைவர்களும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டியதன் அவசியத்தையும் கடமையையும் அங்கு பிரசன்னமாக இருந்த எல்லா மதத்தலைவர்களும் ஒன்றாக வலியுறுத்தினார்கள்.
வட மாகாண சர்வமத குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஒன்றுகூடல் நிகழ்விற்கு யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமை தாங்கினார்.