அழகிய தோற்றத்துடன் கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள புனித திரேசாள் ஆலயத்தின் அபிசேக திருச்சடங்கு நிகழ்வு கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் உதவியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து ஆலயத்தை அபிசேகம் செய்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற், முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

வரலாற்று சிறப்புமிக்க புனித திரேசாள் ஆலயம் கிளிநொச்சி நகரத்தின் மத்தியில் 1930களில் கொட்டில் ஆலயமாக தோற்றம் பெற்று பின் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை யோசப் சூசைநாதர் அவர்களின் காலத்தில் ஒரு கட்டடமாக அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கும் வேறு இடங்களிலிருந்து வன்முறையால் பாதிக்கப்பட்டு கிளிநொச்சி நகருக்கு இடம்பெயர்ந்துவந்த மக்களுக்கும் அடைக்கலம் கொடுத்த ஆலயமாக அமைந்திருந்தது.

வரலாற்று சிறப்புமிக்க இவ் ஆலயத்தை புதிய ஆலயமாக கட்டியெழுப்ப இப்பகுதிமக்கள் முயற்சியெடுத்ததன் பயனாக 2006ஆம் ஆண்டு அப்போதைய ஆயராக இருந்த பேரருட்தந்தை தோமஸ் சவுந்தரநாயகம் அவர்களின் காலத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் தலைமையில் அப்போதைய குருமுதல்வர் அருட்தந்தை நீக்கிலஸ் அவர்களினால் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப்பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

தொடர்ந்து அருட்தந்தை யாவிஸ் அவர்களின் காலத்தில் பணிகள் முன்னெடுக்கப்பட்டு அருட்தந்தை ஜோர்ச் அவர்களின் காலத்தில் ஆலய கட்டுமானப்பணியின் பெரும்பகுதி நிறைவடைந்தது.

தொடர்ந்து அருட்தந்தை ஜேசுதாசன் அவர்களின் பணிக்காலத்தில் ஒரு சில வேலைகள் முன்னெடுக்கப்பட்டு தற்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் காலத்தில் இவ்ஆலயத்திற்கான அபிசேக திருச்சடங்கு நடைபெற்று இவ்வாலயம் புதுப்பொலிவுடன் காட்சிகொடுக்கின்றது.

By admin