கண்டி அம்பிட்டிய தேசிய குருத்துவ கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட ‘உயிர்வாழும் நம்பிக்கை’ ஆய்வரங்கு கடந்த 31ஆம் திகதி வியாழக்கிழமை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
“மதச்சார்பற்ற சமுதாயத்தில் மத நம்பிக்கைகளின் பொருத்தப்பாடு” என்னும் கருப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடக்கவுரையாற்றிய கண்டி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை வலன்ஸ் மென்டிஸ் அவர்கள், இந்நாட்களில் மதச்சார்பற்ற உலகம் மதங்களுக்குள் ஊடுருவுவதால் மதங்கள் அவற்றை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்காமல் பதிலுக்கு மதச்சார்பற்ற உலகத்தினுள் ஊடுருவி நீதி, சமாதானத்துக்காக உழைத்தல், பொதுநிலையினரோடு சேர்ந்து செயற்படுதல், ஒடுக்கப்படும் வறியவரோடு துணை நிற்றல், நற்கல்வி மற்றும் நற்தொழில்நுட்பத்தை சமுதாயத்துக்குள் கொண்டு செல்லல் போன்ற விடயங்களை வினைத்திறனோடு முன்னெடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து கலாநிதி மல்லிகா ராஜரட்ணம், மற்றும் அருட்கலாநிதி போல் றொகான் ஆகியோரால் சிறப்பு உரைகள் வழங்கப்பட்டதுடன் இருபது ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக்கட்டுரைச் சுருக்கங்களை ஐந்து வெவ்வேறு கூடங்களில் அளிக்கை செய்தனர்.
இவர்களுள் யாழ். மறைமாவட்டத்திலிருந்து பங்குபற்றிய அருட்தந்தையர்கள் மூவரும், குருமட மாணவர் ஒருவரும் அடங்குவர்.