1987ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்து இந்திய இராணுவப்படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வைத்தியசாலை நிர்வாகத்தின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 21ஆம் திகதி திங்கட்கிழமை அங்கு நடைபெற்றது.
இந்நினைவேந்தல் நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திரு. சத்தியமூர்த்தி, வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களென பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
1987ஆம் ஆண்டு ஜப்பசி மாதம் 21, 22ஆம் திகதிகளில் யாழ். போதானா வைத்தியசாலைக்குள் தாக்குதல் மேற்கொண்டவண்ணம் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவ அதிகாரி கேணல் பிரார் தலைமையிலான
இராணுவத்தினர் நடத்திய பயங்கரவாத கொலைவெறி தாக்குதலில் 3 வைத்தியர்கள், 2 தாதிகள், 21 பணியாளர்கள், 47 நோயாளர்களென 75ற்கும் மேற்பட்டோர் துப்பாக்கிசூடு மற்றும் கிரணைட் தாக்குதலுக்குட்பட்டு படுகொலை செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.