தேசிய கத்தோலிக்க சமூகதொடர்பு ஆணைக்குழுக்கூட்டம் கடந்த 16ஆம் 17ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஊடக மையத்தின் ஒழுங்குபடுத்தலில் இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்கு களத்தரிசிப்பும் மறைமாவட்ட இயக்குனர்களுக்கான கூட்டமும் நடைபெற்றன.
16ஆம் திகதி புதன்கிழமை மாலை புனித யாகப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப நிகழ்வில் ஆணைக்குழுவிற்கு பொறுப்பான கொழும்பு மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை மக்ஸ்வெல் டி சில்வா அவர்களும் அவருடன் இணைந்து தேசிய இயக்குநர் அருட்தந்தை யூட் கிறிஸாந்த அவர்களும் ஏனைய மறைமாவட்ட இயக்குனர்களும் மாலை அணிவித்து பங்கு மக்களால் வரவேற்கப்பட்டனர்.
தொடர்ந்து பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் தலைமையில் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் நடுமரத்தின் கனி நாடகமும் மரமே விதி எனும் வாரத்தைகளற்ற நாடகமும் மேடையேற்றப்பட்டன.
தொடர்ந்து 17ஆம் திகதி காலை மறைநதி கத்தோலிக்க ஊடகமையத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன. கொழும்பு மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை மக்ஸ்வெல் டி சில்வா அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியை தொடர்ந்து மறைமாவட்ட இயக்குனர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட் ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் மறைமாவட்ட ஊடக மையங்கள் ஆற்றிவரும் பணிகள் பற்றி ஆராயப்பட்டு எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. இந்நிகழ்வில் ஏனைய மறைமாவட்டங்களை சேர்ந்த எட்டு இயக்குனர்கள் பங்குபற்றியிருந்தனர்.