குமுழமுனை பங்கிலுள்ள நொச்சிமுனை புனித பேதுருவானவர் ஆலயத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
1986ஆம் ஆண்டு மண்டைதீவிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து நொச்சிமுனை பிரதேசத்தில் குடியேறினர். இம்மக்கள் அப்பிரதேசத்தில் குடியேறியபோது தமது பங்கின் பாதுகாவலரான புனித இராயப்பரை நினைவுகூர்ந்து ஓர் ஆலயத்தை அங்கு நிறுவியிருந்தனர்.
தமக்கு புகலிடம் தந்து தம்மை அரவணைத்த அவ்விடத்தை நினைவுகூர்ந்து அதற்கு நன்றி செலுத்தும் முகமாகவும் மண்டைதீவு புனித இராயப்பர் ஆலயம் கட்டப்பட்டதன் 125ஆம் அண்டு நிறைவை முன்னிட்டும் இப்புதிய ஆலயம் மண்டைதீவு மக்களால் அங்கு அமைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.