1984 ஆம் ஆண்டு மன்னார் படுகொலைகளின் 40ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு 14ஆம் திகதி ககடந்த சனிக்கிழமை முருங்கன் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் அமைந்துள்ள டொன் பொஸ்கோ இல்லத்தில் நடைபெற்றது.
முருங்கன் பங்குத்தந்தை அருட்தந்தை இராஜநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நினைவஞ்சலியும் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அன்புராசா அவர்களால் எழுதப்பட்ட ‘84, 85 மன்னார் படுகொலைகள் சொல்வதென்ன’ எனும் ஆவண நூல் வெளியீட்டு நிகழ்வும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில், படுகொலை நடைபெற்ற 1984ஆம் ஆண்டு முருங்கனில் வைத்தியராக பணிபுரிந்த திரு. திருநாவுக்கரசு, யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக், முருங்கன் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அலெக்சான்டர் பெனோ, முருங்கன் மெதடிஸ்த திருச்சபை போதகர் எனோசன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திரு. செல்வம் அடைக்கலநாதன் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.
1984ஆம் ஆண்டு மார்கழி மாதம் 04ஆம் திகதி மன்னார் முருங்கன் பிரதான வீதி 11ஆம் கட்டை சந்திக்கருகாமையில் இடம்பெற்ற நிலக்கண்ணி வெடித்தாக்குதலை தொடர்ந்து, வீதியில் சென்று கொண்டிருந்தவர்கள், வவுனியாவுக்கும் மன்னாருக்கும் இரண்டு பேருந்துகளில் பயணம் செய்துகொண்டிருந்தவர்கள், வயல்களில் நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள், முருங்கன் அஞ்சல் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்த அரச ஊழியர்கள், பிரதான வீதியின் அருகே வீடுகளில் வாழ்ந்து வந்தவர்கள் எனக் கண்ணில் பட்ட சுமார் 200 வரையானவர்களை அங்கு வருகைதந்த இராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமாக சுட்டுப்படுகொலை செய்தனர்.
இப்படுகொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதாக அருட்தந்தை அன்புராசா அவர்களின் நூல் அமைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.