யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 175ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல சிறப்புநிகழ்வுகள் கல்லூரியில் முன்னெடுக்க ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் அது தொடர்பான ஊடக சந்திப்பொன்று 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது.
இச்சந்திப்பில் கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் மற்றும் பிரதி அதிபர் திரு. ஜக்சன் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வுகள் தொடர்பாக விளக்கமளித்து இவற்றில் பங்குபற்றும் படி கல்லூரியின் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இச்சந்திப்பில் உரையாற்றிய அதிபர் அவர்கள் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளில் பழைய மாணவர்களை மையமாக கொண்ட முதல் கட்ட நிகழ்வுகள் இம்மாதம் 27, 28, பங்குனி 01ஆம் திகதிகளில் தங்க அணிகளுக்கிடையிலான துடுப்பாட்ட போட்டியும் பங்குனி மாதம் 14ஆம் திகதி Patrician நடைபவனியும், 15ஆம் திகதி வெளிநாடுகளை சேர்ந்த பழைய மாணவர்களுக்கான துடுப்பாட்ட போட்டியும் இடம்பெறவுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.
பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு தினத்தை மையப்படுத்தி நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட நிகழ்வில் ஆடி மாதம் 21,22 ஆம் திகதிகளில் துடுப்பாட்ட கொண்டாட்டமும் 23ஆம் திகதி காற்பந்தாட்ட, கூடைப்பந்தாட்ட கொண்டாட்டமும் 24ஆம் திகதி பரிசளிப்பு விழாவும், 25ஆம் திகதி ஒன்றுகூடலும், 26ஆம் திகதி வர்த்தக சந்தையும் கண்காட்சியும், 27ஆம் திகதி கலாச்சார விழா, இசை நிகழ்ச்சி, முத்திரை வெளியீடு போன்ற நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஏனைய பாடசாலை மாணவர்களை மையமாகக் கொண்ட மூன்றாம் கட்ட நிகழ்வுகளில் சித்திரை மாதம் 23,24 ஆம் திகதிகளில் திருவிவிலிய போட்டியும், வைகாசி மாதம் 8-11 ஆம் திகதி வரை துடுப்பாட்ட சுற்றுத்தொடரும், 16,17ஆம் திகதிகளில் கூடைப்பந்தாட்ட போட்டியும் ஆடி மாதம் முதலாம் வாரம் தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையிலான விவாத போட்டியும், இரண்டாம் வாரம் தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில மற்றும் தமிழ் நாடக போட்டியும் 19-21 தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையிலான காற்பந்தாட்ட சுற்றுத்தொடரும் நடைபெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படடுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.