கலைப்பணியில் 58 ஆண்டுகளை நிறைவு செய்யும் திருமறைக் கலாமன்ற கலைநிறுவன தினம் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நிகழ்வுகளுடன் யாழ்ப்பாணத்தில் சிறப்பிக்கப்பட்டது.
அன்றைய தினம் காலை யாழ். மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள கலைஞானசுரபி தியான இல்லத்தில் நன்றி வழிபாடும் தொடர்ந்து, யாழ். பிரதான வீதி மன்ற அலுவலகத்தில் அமைந்துள்ள கலைத்தூது மணிமண்டபத்தில் குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து இத்தினத்தை சிறப்பிக்கும் கலைநிகழ்வுகள் அன்று மாலை கலைத்தூது கலையகத்தில் இடம்பெற்றன.
இக்கலைநிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சிவபாலசுந்தரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ். பிராந்திய உதவிப் பணிப்பாளர் திரு. கந்தவேள் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவிகளின் நடனங்கள், கலைஞர் கௌரவிப்பு, திருமறைக் கலாமன்றத்தால் நடத்தப்பட்ட யாழ்ப்பாண தென்மோடி கூத்து மரபு ஓராள் ஆற்றுகைப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு என்பவற்றுடன் சிறப்பு நிகழ்ச்சியாக திருமறைக் கலாமன்றக் கலைஞர்கள் வழங்கிய “நொண்டி நாடகம்” தென்மோடி நாட்டுக்கூத்தும் இடம்பெற்றது.

By admin