யாழ்ப்பாண மறைமாவட்ட பங்குகளில் மறைக்கல்வி கற்பிக்கும் மறையாசிரியர்களுக்கான மூன்று மாதகால வதிவிடப் பயிற்சி தை மாதத்திலிருந்து சித்திரை மாதம் வரையான காலப்பகுதியில் யாழ். மறைக்கல்வி நடுநிலையத்தில் நடைபெற்றது. பல்வேறு பங்குகளிலிருந்தும் 21 மறையாசிரியர்கள் இப்பயிற்சியில் பங்குபற்றினார்கள். இப்பயிற்சியின் இறுதி நாள் நிகழ்வாக சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 13.04.2019 சனிக்கிழமை யாழ். மறைக்கல்வி நடுநிலையத்தில் இயக்குனர் அருட்திரு பெனற் அடிகளார் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக யாழ். மறைமாவட்ட ஆயர் மேதகு யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மறைமாவட்டத்தின் மூத்தகுருவும் யாழ். மறைமாவட்ட நிரந்தர மறையாசிரியர்களுக்கான முதன்மை வழிகாட்டியுமான அருட்திரு s.j. இம்மானுவேல் அடிகளாரும், பருத்தித்துறை மறைக்கோட்ட முதவல்வர் அருட்திரு யாவிஸ் அடிகளாரும் கலந்து சிறப்பித்தனர். மேலும் மறைக்கோட்ட முதல்வர்கள், மறைக்கோட்ட மறைக்கல்விப்பணி இணைப்பாளர்கள், பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் காலை 9.00 மணியளவில் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் தலைமையில் சிறப்புத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து மறைக்கல்வி நடுநிலையத்தில் கலைநிகழ்வுகளுடன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது.