வடக்கு கிழக்கு ஆயர்மன்ற ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் வடக்கு கிழக்கு மறைமாவட்டங்களை சேர்ந்த மறையாசிரியர்களுக்கான ஒருமாத கால வதிவிடப்பயிற்சி 06ஆம் திகதி சனிக்கிழமை இன்று மன்னார் மறைமாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளது.

வருகின்ற ஆவணி மாதம் 03ஆம் திகதி வரை மன்னார் மடுத்திருத்தல தியான மண்டபத்தில் நடைபெறவுள்ள இப்பயிற்சி நெறிக்கான ஆரம்ப நிகழ்வுகள் வதிவிடப்பயிற்சி இணைப்பாளரும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வருமான அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இன்றைய தினம் காலை அங்கு நடைபெற்றது.

மன்னார் மமைறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்ணான்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியுடன் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பநிகழ்வில் நான்கு தமிழ் மறைமாவட்டங்களை சேர்ந்த 37வரையான மறையாசிரியர்கள் பங்குபற்றியுள்ளதுடன் மறைமாவட்டங்களின் மறைக்கல்வி நிலைய இயக்குனர்கள், குருக்கள், துறவிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மறைமாவட்டமறைக்கல்வி நிலைய இயக்குனர்களின் உதவியுடன் நடைபெறவுள்ள இவ் ஒருமாத கால வதிவிடப் பயிற்சியில் ஐந்நூல், வரலாற்று நூல்கள், இறைவாக்கினர்கள், புதிய ஏற்பாடு, திருவழிபாடு, கிறிஸ்து இயல், மரியாள் இயல், ஒழுக்க இறையியல், புகுமுக அருட்சாதனங்கள், திருமணம், உலக திருஅவை வரலாறு, இலங்கை திருஅவை வரலாறு, செபமும் ஆன்மீகமும், வத்திக்கான சங்க ஏடு, மறைக்கல்வி போதானா முறை, வளர்ச்சி உளவியல், கத்தோலிக்க திருஅவையின் போதனை, கத்தோலிக்க திருமண ஒழுங்குமுறைகள், மனித மைய மறைக்கல்வி, தலைமைத்துவம் ஆகிய பாடப்பரப்புக்கள் உள்ளடங்கியுள்ளதுடன் யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மறைமாவட்டங்களை சேர்ந்த குருக்கள், துறவிகள், பொதுநிலை பணியாளர்கள் இக்கற்கை நெறியில் விரிவுரையாளர்களாக கடமையாற்றவுள்ளார்கள்.

By admin