வத்திக்கானிலிருந்து ஆசியா மற்றும் ஒசியானியாவின் 4 நாடுகளுக்கான தனது 45ஆவது திருப்பயணத்தை ஆரம்பித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்தோனேசியாவை சென்றடைந்த நிலையில் அங்குள்ள அகதிகள், ஆதரவற்ற கைவிடப்பட்ட சிறார்கள் குடிபெயர்ந்த மக்கள், மற்றும் மியான்மாரைச் சேர்ந்த ரொஹிங்கியா இனத்தவரை சந்தித்து உரையாடியுள்ளார்.
விசுவாசிகளை சந்தித்து ஊக்கமளிக்கவும், மதங்களிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கவும், இயற்கை மீதான அக்கறையை வெளிப்படுத்துவதை ஊக்கமளிக்கவும் இந்தோனேசிய திருப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் திருத்தந்தை தம்மை காண காத்திருந்த நலிவடைந்த மக்களை சந்தித்து அவர்களோடு தனித்தனியாக உரையாடி, அவர்கள் சொல்வதைக் கேட்டு அவர்களுக்கு தமது ஆறுதலை வெளிப்படுத்தியுள்ளார்.
இச்சந்திப்பின் போது இலங்கை அகதிகளாக இந்தோனேசியாவில் வசித்துவரும் மன்னார் மறைமாவட்ட விடத்தல்தீவு கிராமத்தை சேர்ந்த திரு திருமதி சுதாகரன் மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகளையும் திருத்தந்தை அவர்கள் சந்தித்து அவர்களுடன் உரையாடியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.