போர்த்துக்கல் நாட்டின் பற்றிமா பதியில் அன்னை கொடுத்த காட்சிகளில் இறுதிகாட்சி இடம்பெற்ற தின திருவிழா கடந்த 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமை தாங்கி திருநாள் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.ஆயர் தனது மறையுரையில் இறைவனின் திட்டத்திற்கு தன்னை முழுவதுமாய்க் கையளித்த அன்னை மரியா, தான் கொடுத்த வாக்குறுதிக்கு இறுதிவரை பிரமாணிக்கமாய் இருந்தார் என்பதனை சுட்டிக்காட்டி அன்னையின் பிள்ளைகளாக இருக்கின்ற நாங்களும் எமது வாழ்வியலின் ஒவ்வொரு நிலையிலும் எமது கடமைகள் பொறுப்புக்களில் பிரமாணிக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார்.
அத்தடன் பற்றிமா பதியில் காட்சிகொடுத்த அன்னை, தவறான பாதையில் பயணித்தோரை, மனம் திரும்பி அனுதினம் செபமாலை சொல்லி தூய்மையான வாழ்வுக்கு திரும்பும்படி விடுத்த அழைப்பு இன்று எமக்கும் விடுக்கப்படுகின்றது என்பதனை குறிப்பிட்டு அந்த தாயின் அழைப்புக்கு செவிமடு;க்கின்ற பிள்ளைகளாக செபமாலையை கைகளில் ஏந்தி மனம்மாறி எமது வாழ்வு நிலைகளில் மாற்றங்ளை ஏற்படுத்துவோம் என்ற சிந்தனையை வழங்கினார். அத்துடன் மனிதரை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிகின்ற மனிதநேயமற்ற பண்புகளை விட்டுவிட்டு குடும்பத்திலும் சமூகத்திலும் பிறருக்காக வாழுகின்ற பண்பினை வளர்த்துக்கொண்டு திருநிலையினரும் பொதுநிலையினரும் மரியன்னையின் கீழ்ப்படிவினை பின்பற்றி தமது அழைப்பிற்கு பிரமாணிக்கமாயிருந்து அன்னையைப் போல் எல்லா நிலையிலும் கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்பதனை விசுவசித்து வாழவோண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.திருவிழாவிற்கு முதல் நாள் 12ஆம் திகதி செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு அங்கு திருச்செபமாலையும் தொடர்ந்து நற்கருணை விழா திருப்பலியும் அங்கு இடம்பெற்றது. பண்டத்தரிப்பு பங்குத்தந்தை அருட்திரு. மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கோவிட்-19 சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக இவ்வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன.