யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு நடைபெற்ற 4ஆவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் 50ஆவது ஆண்டு நினைவுநாள் சிறப்பு நிகழ்வு 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருநகர் கடற்கரை வீதியில் அமைந்துள்ள கலையரங்கில் நடைபெற்றது.
குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் தலைமையில் குருநகர் முன்னேற்ற ஜக்கிய முன்னணியினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் குருநகர் சிறுவர் பூங்காவில் 4வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் நினைவாக நிறுவப்பட்டு தமிழ்த்தூது தனிநாயகம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்ட பன்மொழிப்புலவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களின் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு கலையரங்கில் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
யாழ்ப்பாண தமிழ்தூது தனிநாயகம் அடிகளார் ஆய்வு மன்ற இணைப்பாளர் அருட்கலாநிதி ஜெயசேகரம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் சொற்பொழிவுகள், நடனங்கள், இசை நிகழ்ச்சி என்பன இடம்பெற்றதுடன் சிறப்பு நிகழ்வாக குருநகர் இளைஞர் கலைக்கழகத்தினரால் ‘கும்பகர்ணன்’ தென்மோடிக்கூத்தும் மேடையேற்றப்பட்டது.
உலக நாடுகளில் பணியாற்றும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்திஇ தமிழ் மொழியை வளப்படுத்த முன்னெடுக்கப்படும் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு முதன் முதலில் தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் 1966ஆம் ஆண்டுஇ மலேசியா கோலாலம்பூரில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்தியா சென்னையிலும். பிரான்ஸ் பரீசிலும் நடைபெற்றதுடன் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 03ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 09ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இம் மாநாட்டின் ஆய்வு அமர்வுகள் யாழ். வீரசிங்கம் மண்டபத்திலும் யாழ். றிம்மர் மண்டபத்திலும் நடைபெற்ற வேளையில் இறுதி நாளகிய ஜனவரி 10ஆம் திகதி இம்மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பத்திற்கும் அதிகமானவர்கள் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டிலும் அதன்பின் ஏற்பட்ட குழப்ப நிலையினாலும் கொல்லப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin