இலங்கை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், கலைக்கழகம் மற்றும் அரச நாடக ஆலோசனைக் குழு இணைந்து முன்னெடுத்த 2024ஆம் ஆண்டிற்கான அரச நாடக விருது வழங்கும் நிகழ்வு கடந்த 23ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பு, நெலும் பொகுன கலையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ். திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குநர் திரு. யோண்சன் ராஜ்குமார் அவர்கள் நாடகத்துறையில் வழங்கப்படும் அரச உயர் விருதுகளில் ஒன்றான நாடகக்கீர்த்தி விருதினை பெற்றுக்கொண்டார்.
இவ்விருதினை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி அவர்கள் வழங்கிவைத்ததுடன் இந்நிகழ்வில் இவ்விருதினை பெற்றுக்கொண்ட ஒரே ஒரு தமிழ்க் கலைஞர் இவரென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
திரு. ஜோன்சன் ராஜ்குமார் அவர்கள் நாடக கற்கைநெறியின் யாழ் கல்விவலய ஆசிரிய ஆலேசகராக தற்போது பணியாற்றிவருவதுடன் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நாடகத்துறையில் ஈடுபாடுகொண்டு 40ற்கும் அதிகமான நாடகங்களை எழுதியும் 100ற்கும் அதிகமான நாடகங்களையும் நெறியாள்கை செய்ததும் ஏராளாமான நாடகங்களில் முக்கியமான கதாபாத்திமேற்றும் நடித்துள்ளார்.
இவரால் எழுதப்பட்டு நெறியாள்கைசெய்யப்பட்ட கூத்துரவ நாடகங்களான ‘கொல்லீனும் கொற்றம்’ ‘அற்றைத் திங்கள்’ ‘செம்பாத்தாள்’ ஆகியவை திருமறைக்கலாமன்ற கலைஞர்களால் பல இடங்களிலும் மேடையேற்றப்பட்டு பலரது பாராட்டினையும் பெற்றுக்கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.