இலங்கை தேசிய மக்கள் சக்தி தலைவர் திரு. அனுரகுமார திசநாயக்க அவர்கள் கடந்தவாரம் யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் கடந்த 11 ஆம் திகதி யாழ். மறைமாவட்ட குருக்கள், துறவிகள்,
அருட்சகோதரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ். பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள அகவொளி குடும்ப நல நிலையத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் திரு. அனுரகுமார திசநாயக்க அவர்கள் தனது தேர்தல் கொள்கை பிரகடனம் பற்றி விளக்கம் அளித்தார்.
இதன் போது அவர் தெரிவிக்கையில் கடந்த கால ஆட்சியாளர்கள் ஏதோ ஒரு இனத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்தே ஆட்சியை கைப்பற்றினார்கள், தமிழர்களுக்கு எதிராக ஒரு சாராரும் முஸ்லிம்களுக்கு எதிராக இன்னொரு சாராரும் பிரச்சாரம்செய்து ஆட்சிகளை கைப்பற்றியமையால் அவர்களின் ஆட்சி இனவாத, மதவாத, மொழிவாத ஆட்சிகளாகவே அமைந்தது.
இதன் விளைவாக மக்கள் அடக்குமுறைகளையும் புறக்கணிப்புகளையுமே அனுபவித்தார்கள்.
ஆனால் எமது கொள்கை பிரகடனம் எந்த ஒரு இன மக்களுக்கும் எதிரானது அல்ல.
எல்லா மக்களும் ஒற்றுமையாகவும் சமத்துவமாகவும் வாழுகின்ற ஒரு இலங்கையை கட்டி எழுப்புவதே எமது கருத்தியலாகும் என்று குறிப்பிட்டார்.
இச்சந்திப்பில் யாழ் மறைமாவட்ட குரு முதல்வர், இளவாலை மறை கோட்ட முதல்வர் உட்பட பல குருக்கள் துறவிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களையும் சந்தேகங்களையும் எடுத்துரைத்தார்கள்.