யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் அருட்சகோதரர்களுக்கான திருத்தொண்டர் திருநிலைப்படுத்தல் திருப்பணிகள் வழங்கல் மற்றும் குருத்துவ வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் திருச்சடங்குகள் 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றன.
கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி சிற்றாலயத்தில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்சகோதரர்கள் பொன்ராசா டினுசன், லூயிஸ் அன்ரனி றொக் பஸ்ரியன், அலெக்சாண்டர் றொகான் டியோனி, கிறிஸ்ரி ஞானராஜா றொகான் மற்றும் அமலமரித்தியாகிகள் சபை அருட்சகோதர் சகாயதாசன் விமல்ராஜ் ஆகியோர் திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்தப்பட்டார்கள்.
அத்துடன் யாழ்ப்பாணம், மன்னார், கொழும்பு, சிலாபம், பதுளை, திருகோணமலை மறைமாவட்டங்களையும் பிரான்சிஸ்கன் சபையையும் சேர்ந்த 20 அருட்சகோதரர்களுக்கு பீடத்துணைவர்கள், வாசகர்கள், குருத்துவவேட்பாளர் ஆகிய திருப்பணிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் குருக்கள்,துறவிகள், இறைமக்களெனப் பலரும் கலந்து அருட்சகோதரர்களுக்காக செபித்தனர்.