சுவாசக்குழல் அழற்சி நோயால் பாதிக்கப்படிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அதற்கு சிகிச்சை பெறுவதற்காக உரோம் நகரின் அகுஸ்தீனோ ஜெமல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருஅவை செய்தியூடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலையில் கருதினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே, ஸ்லோவாக்கியா பிரதமர், சமூகத்தொடர்புத்துறையின் தலைவர், ஆகியோரைச் சந்தித்தபின், Gaudium et Spes அமைப்பின் அங்கத்தினர்களையும் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அதன்பின் ஜெமல்லி மருத்துவமனைக்குச் சென்று சுவாசக்குழல் அழற்சி நோய்க்கான சிகிச்சையை ஆரம்பித்துள்ளதாகவும் ஏறக்குறைய கடந்த 10 நாட்களாக சுவாசக்குழல் அழற்சி நோயால் அவதியுற்றுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மைக்காலங்களில் புதன் மறைக்கல்வி உரையின்போதும் சுவாசிப்பதற்கு சிரமங்களை எதிர்கெண்டதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவயதிலேயே நுரையீரலின் ஒரு பகுதி நோய் காரணமாக நீக்கப்பட்டிருந்த 88 வயதான திருத்தந்தை அவர்கள், மருத்துவமனையில் தங்கியிருந்து மூச்சுக்குழல் அழற்சி நோய்க்குரிய சிகிச்சையைப் பெறுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இம்மாதம் 6ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மூச்சுக்குழல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் சந்திப்புக்கள் அனைத்தும் அவர் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலேயே இடம்பெறும் எனவும் திருப்பீடம் அறிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin