சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிர் இழந்தவர்களின் 20ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 26ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பல இடங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது.
குறிப்பாக தமிழர் தாயக கரையோர பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்து உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தமிழர் தாயக பகுதியில் 1000ற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்ட முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் முல்லைத்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சர்வமத வழிபாடுகளும் தொடர்ந்து திருப்பலியும் நடைபெற்றன.
திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. குணபாலன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திரு. துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு பிரதேச சபை செயலாளர், 591 இராணுவ படை Brigadier, பொலிஸ் அதிகாரி, முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை, கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற், குருக்கள், துறவிகள், பொதுமக்களென ஆயிரக்கணக்கானோர் கலந்து இறந்தவர்களுக்கான அஞ்சலியை செலுத்தினார்கள்.
2004 ஆம் ஆண்டு மார்கழி 26ஆம் திகதி சுமத்திரா தீவின் வடமேற்கு கடற்கரையிலிருந்து 150 கிமீ தூரத்தில் ஆழ்கடலில் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக உருவான சுனாமி ஆழிப்போரலை இயற்கை அனர்த்தத்தால் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா, மாலைதீவுகள் ஆகிய 14 நாடுகளைச் சேர்ந்த 230,000 பேர் உயிரிழந்தனர்.
இவர்களில் 35ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்ததில் உயிரிழந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.