தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல வருடாந்த திருவிழா எதிர்வரும் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு கட்டமாக திருவிழாவிற்கான முன்னாயத்த கூட்டம் 11ஆம் திகதி புதன்கிழமை வேலனை தெற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
வேலனை தெற்கு பிரதேச செயலாளர் திரு. கைலாசபிள்ளை சிவகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் உணவு போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இக்கூட்டத்தில் தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பேனாட் றெக்னோ, சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெகன்குமார், பிரதேச செயலக பணியாளர்கள், சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ், இலங்கை முதல் உதவி சங்கத்தினர், இலங்கை காவல் துறை, கடற்படை அதிகாரிகள், கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சு பணியாளர்கள், மின்சார, போக்குவரத்து மற்றும் சுகாதார பிரிவினர், கிராம உத்தியோகத்தர்களென பலரும் கலந்துகொண்டனர்.