நோயில்பூசுதலை, ஒப்புரவு அருளடையாளத்தை அல்லது திருநற்கருணையை வாங்க இயலாத நோயாளிகள், தங்களை இறை இரக்கத்திடம் அர்ப்பணிக்க வேண்டும்
கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களுக்குச் சிகிச்சை வழங்கும் மருத்துவப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், குடும்பத்தினர், இத்தொற்றுக்கிருமி பரவாமல் தடைசெய்யப்பட செபிப்பவர்கள் ஆகிய அனைவருக்கும் பரிபூரண பலன்களை, மார்ச் 20, இவ்வெள்ளியன்று கர்தினால் Piacenza அவர்கள் அறிவித்திருந்தார். இதையொட்டி, வத்திக்கான் செய்தித் துறைக்குப் பேட்டியளித்த கர்தினால் Piacenza அவர்கள், கோவிட்-19 தொற்றுக்கிருமி நெருக்கடிவேளையில் பரிபூரணபலன் அளிக்கப்பட்டது பற்றி முதலில் விளக்கினார்.திருஅவையின் உயரிய சட்டம், ஆன்மாக்களின் மீட்பு என்றும், திருஅவை இவ்வுலகில் நற்செய்தியை அறிவித்து, இறைவனின் உன்னதக் கொடைகளாகிய அருளடையாளங்களை வழங்கி, இறையருள் அனைவருக்கும் கிடைக்குமாறு செய்கின்றது என்றும், கர்தினால் Piacenza அவர்கள் கூறினார். இந்நெருக்கடி வேளையில், நோயாளிகள் தனிமைப்படுத்தப்படுவதால், அவர்களை அன்புகூர்பவர்களின் ஆறுதல் மற்றும், அருகாமையின்றி இறக்கின்றனர், அவர்களுக்கு அருள்பணியாளர்கள், ஒப்புரவு அருளடையாளத்தைக் கேட்கவும், நோயில் பூசுதலை அளிக்கவும் இயலாமல் உள்ளனர், மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்று, இப்போது பரிபூரண பலன்களை அறிவித்ததற்குக் காரணங்களை கர்தினால் விளக்கினார்.
கொரோனா தொற்றுக்கிருமி உருவாக்கியுள்ள இந்த நெருக்கடியான சூழலில், பரிபூரண பலன், இறைஇரக்கத்தால் போர்த்தப்படும் மாபெரும் மேலாடை என்று, திருப்பீட மனசாட்சிப் பேராயத் தலைவர், கர்தினால் Mauro Piacenza அவர்கள் கூறினார். துன்புறும் மற்றும், மரணத்தை எதிர்கொள்ளும் மக்கள் கடவுளின் பராமரிப்பை ஒருபோதும் தவறவிடாமல் இருக்கவும், அவர்களுக்கு திருஅவை ஆறுதலாகவும், நெருக்கமாகவும் இருக்கின்றது என்பதை உணர வைக்கவும், அவசர காலங்களில், அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும், கர்தினால் Piacenza அவர்கள் கூறினார்.
பரிபூரண பலன்களைப் பெறும்முறை
கோவிட்-19 நோயாளிகளும், அவர்களைப் பாரமரிப்பவர்களும், ஆன்மீக முறையில் ஒன்றித்திருந்து, இயலக்கூடிய வகையில், ஊடகம் வழியாக, திருப்பலி அல்லது செபமாலை பக்தி முயற்சி அல்லது சிலுவைப்பாதை அல்லது மற்ற பக்தி முயற்சிகளில் பங்குகொள்ள அழைக்கப்படுகின்றனர். இது இயலாதபட்சத்தில், அவர்கள் விசுவாச அறிக்கை, இயேசு கற்றுக்கொடுத்த செபம் மற்றும், அன்னை மரியாவை நோக்கிச் செபம் சொல்ல வேண்டும். மேலும், இந்நோயால் இறந்தவர்கள், துன்புறுவோர், மற்றும், இந்த கொள்ளை நோய் முடிவுற செபிப்பவர்கள், இயலக்கூடிய இடத்தில் திருநற்கருணை சந்திப்பு அல்லது, திருநற்கருணை ஆராதனையில் பங்கு கொள்ள வேண்டும். அல்லது, விவிலியத்தை குறைந்தது அரைமணி நேரம் வாசிக்க வேண்டும் அல்லது செபமாலை, சிலுவைப்பாதை ஆகியவற்றை செபிக்க வேண்டும், இவற்றை வீட்டில் இருந்துகொண்டே செய்யலாம் என்று கர்தினால் கூறியுள்ளார். இவர்கள் எல்லாருமே தங்கள் வாழ்நாளில் ஏதாவது ஒரு செபத்தை தவறாமல் செபித்திருக்க வேண்டும். மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்