கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்கு சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி தனிநாயகம் தமிழ் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் விழா கடந்த 18ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் வழிநடத்தலில் மன்ற காப்பாளர் அருட்தந்தை நெவின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் குருமட வெளியரங்கில் இந்நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் அமரர் அருட்தந்தை தனிநாயகம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஒளியேற்றப்பட்டது.
தொடர்ந்து தமிழ்விழா நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இவ்விழாவின் சிறப்பு நிகழ்வாக திரு. அன்று யூலியஸ் அவர்களின் நெறியாள்கையில் சவுலின் மனமாற்றத்தை சித்தரிக்கும் சங்க நாதம் நாட்டுக்கூத்தும் அருட்சகோதரர்களால் ஆற்றுகை செய்யப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அருட்தந்தை பிலேந்திரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் அமலமரித்தியாகிகள் யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.